முதல் சனி பக்தி
தொடர்ச்சியாக ஐந்து மாதங்களின் முதல் சனிக்கிழமைகளில் அநுசரிக்கப்படும் இந்த பக்தி பாவிகளால் நம் பரலோக அன்னையின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பக்தி முயற்சியை அநுசரிப்பவர்களுக்கு அமல உற்பவ அன்னை இரட்சணியத்தை வாக்களித்திருக்கிறார்கள்.
ஒருவன் மாமரியை உண்மையாகவே அறிந்து அவர்களை நேசித்து அவர்களுக்கு ஊழியம் செய்கிறான் என்றால், அவன் எந்த ஒரு அநுகூலத்தையும் தேட மாட்டான். மாறாக, நம் பரலோக அன்னையின் மீதும், அவர்களுடைய துன்பங்கள், வியாகுலங்கள், அவர்களுடைய இருதயத்தைக் குத்தியிருக்கும் முட்கள் ஆகியவற்றின்மீது தன் முழு கவனத்தையும் செலுத்துவான். அவர்களுடைய உண்மையான குழந்தையாக இருப்பவன் அவர்களுக்கு ஆறுதல் தர முயற்சி செய்வான்.