குழந்தைப் பருவமும், இளம் பருவமும்
1894 ஜனவரி 8 அன்று ஜுலியன் கோல்பே, மரியன் கோல்பே என்னும் பெற்றோருக்கு ஸிடென்ஸ்காவோலாவிலுள்ள அவர்களுடைய குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் இரண்டாவது மகனாக மாக்ஸிமிலியன் பிறந்தார். அவர் பிறந்த அன்றே மகா பரிசுத்த கன்னி மாமரியின் பரலோக ஆரோபணக் கோவிலில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ரேமண்ட் என்னும் ஞானஸ்நானப் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
அவருடைய பெற்றோர் நெசவுத் தொழில் செய்பவர்கள். பணப்பிரச்சினைகளின் காரணமாக அவர்கள் லோட்ஸ் என்னும் ஊருக்கும், அதன்பின் பாபியானீஸ் என்னும் ஊருக்கும் குடிபெயர்ந்தார்கள். அங்கே ஜுலியன் கோல்பே ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். ரேமண்டின் தாய் ஒரு சிறு கடை நடத்திக் கொண்டே பிரசவம் பார்க்கும் தாதியாகவும் வேலை செய்து வந்தாள். ஜுலியன், மரியன் கோல்பே இருவரும் பிரான்சிஸ்கன் சபையின் மூன்றாம் சபையில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களுடைய மூன்று மகன்களுக்கும் (மூத்தவர் பிரான்சிஸிக்கும், ரேமண்டுக்கும், இளையவரான ஜோசப்புக்கும்) வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது.
ரேமண்ட் மிகச் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவராக இருந்தார். பல மேலான கொடைகள் அவருக்குத் தரப்பட்டிருந்தன. ஆர்வமும் நம்பிக்கையுமுள்ள ஓர் அற்புதமான குணமும் அவருக்கு அருளப்பட்டிருந்தது. ஆயினும் விளையாட்டு குணமும், துடுக்கும் அவரிடமிருந்தது.
ஆகவே அவருடைய தாய் அவருடைய நடத்தை பற்றி அடிக்கடி அவரைக் கடிந்து கொண்டாள். ஒரு நாள் அவள் வருத்தத்தோடும், கவலையோடும் அவரிடம்் “என் மகனே, உனக்கு என்னதான் நேரிடப் போகிறதோ? என்றாள். அவருடைய தாயின் இந்தக் கேள்வி பத்து வயதுச் சிறுவனான ரேமண்டின் மனதில் எந்த அளவுக்கு மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது என்றால், தமது எதிர்காலத்தைப் பற்றி தமக்குக் கூறும்படி அவர் தேவமாதாவிடம் மன்றாடத் தொடங்கி விட்டார். படிப்படியாக அவருடைய விளையாட்டுக் குணம் மாறி, அவர் அதிக அழ்ந்த தன்மையுள்ளவரானார். அடிக்கடி ஜெபிக்கத் தொடங்கினார். அவருடைய தாய் தன் மகனிடம் நிகழ்ந்த இந்த மாற்றத்தைக் கவனித்து, அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டாள். முதலில் அவர் காரணத்தைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இறுதியாகத் தம் மனதை மாற்றிக் கொண்டு, அவளிடம்: “நான் கோவிலில் நம் திவ்விய அன்னையின் திருப்படத்திற்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, மாதா தன் கரங்களை என்னை நோக்கி நீட்டினார்கள். அவர்கள் இரண்டு கிரீடங்களை வைத்திருந்தார்கள். ஒரு கரத்தில் சிவப்பு நிறமான ஒரு கிரீடம் இருந்தது. மற்றதில் ஒரு வெள்ளை நிறக் கிரீடம் இருந்தது. எனக்கு எது வேண்டும் என்று மாதா என்னிடம் கேட்டார்கள். நான் இரண்டு கிரீடங்களையும் அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டேன்” என்றார்.
அடுத்த திருப்புமுனை 1907-ம் ஆண்டு ல்வோவைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் சபைத் துறவற குரு பெரேக்ரிம் ஹாக்ஸேலா என்பவரால் தரப்பட்ட பங்கு தியானப் பிரசங்கங்களின் போது வந்தது. அவர் ல்வோவிலுள்ள பிரான்சிஸ்கன் தந்தையரின் கீழ்நிலைக் குருமடத்தில் சேரும்படி ரேமண்டையும் அவருடைய அண்ணன் பிரான்சிஸையும் ஊக்கப்படுத்தினார். ரேமண்ட் விஞ்ஞான பாடத்தில் மிகச் சிறந்த மாணவராக இருந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகப் பிடித்தமான இரண்டு பாடங்களாக இருந்தன. அப்போதே அவர் விண்வெளிப் பயணத்திற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றியெல்லாம் பேசுவார். இயற்பியலின் எண்களையும், விதிகளையும் கொண்டு இதை நிரூபிக்க முயலும் அளவுக்கு அவர் இதில் ஆர்வம் காட்டினார். இவையெல்லாம் அவருடைய இளம்பருவத்திற்கேயுரிய வெறும் கற்பனைகள் அல்ல என்பதை 1915-ம் ஆண்டில், கிரகங்களுக்கு இடையில் பயணம் செய்யக்கூடிய விண்வெளி ஓடம் ஒன்றின் வரைபடம் ஒன்றை வெளியிட்டபோது அவர் நிரூபித்தார். இந்த விண்வெளி ஓடத்திற்கு அவர் “ஈத்தர் விமானம்” என்று பெயரும் இட்டிருந்தார். அதன் அமைப்பு மூன்று எரிவாயு வெளியேற்றுக் கருவிகள் உள்ள ராக்கெட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
கீழ்நிலைக் குருமடத்தில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் மாமரியின் ஊழியத்திற்குத் தம்மை அர்ப்பணிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்தார். ல்வோவ் மேற்றிராசனக் கோவிலிலுள்ள கருணையுள்ள தேவமாதாவின் புதுமைப் படத்திற்கு முன்பாக அவர் தமது வார்த்தைப்பாடுகளைத் தந்தார். அங்கேதான் அரசர் ஜான் கஸிமிர் வாஸா தேவமாதாவைத் தம் நாட்டின் அரசியாகப் பிரகடனம் செய்து, போலந்தின் அரச மகுடத்தை மாமரிக்கு அர்ப்பணித்தார். தம்முடைய இந்த அர்ப்பணத்தைப் பற்றி சுவாமி மாக்ஸிமிலியன் பின்வருமாறு எழுதினார்: “பீடத்தின்மீது அரசாள்பவர்களாகிய மகா பரிசுத்த கன்னிமாமரிக்காக நான் போராடுவேன் என்று நெற்றி தரையில் பட அவர்களை வணங்கி நான் வார்த்தைப்பாடு தந்தேன். எப்படிப் போராடப் போகிறேன்? எனக்குத் தெரியாது என்றாலும் அச்சமயத்தில் ஆயுதப்போராட்டமாகத்தான் நான் அதைக் கற்பனை செயதிருந்தேன்!”
ஆயினும், ஒரு குருவாக இதைச் செய்வதற்கு சாத்தியமேயில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் தமது தேவ அழைத்தலைத் துறந்து விட்டு, ஒரு போர்வீரராகி விட வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சகோதரர் பிரான்சிஸிக்கும் இதே ஆசை இருந்தது. இருவரும் குருமடத்தை விட்டு விலக முடிவு செய்தனர். அதே சமயத்தில் அவர்களுடைய தாய் அவர்களைச் சந்தித்து அவர்களுடைய தந்தையோடு சேர்ந்து, தன் வாழ்வை தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப் போவதாகத் தெரிவித்தாள்! தாம் குருமடத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்கு தேவ பராமரிப்பு தந்த அடையாளம் இது என்று ரேமண்ட் புரிந்து கொண்டார்.
1910-ல் அவர் மாக்ஸிமிலியன் என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டு, பிரான்சிஸ்கன் நவசந்நியாசத்தில் தம்மை சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். 1912-ல் அவர் க்ராக்கோ என்னுமிடத்தில் தம் படிப்பைத் தொடங்கினார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, அவர் உரோமையிலுள்ள சர்வதேச பக்திச்சுவாலகர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். டிசம்பர் 1 அன்று மேரி என்னும் பெயரைத் தேர்ந்து கொண்டு, தமது நிரந்தர வார்த்தைப்பாடுகளைத் தந்தார். 1916-ல் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் அவர் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு வருடம் கழித்து, இன்னும் உபதியாக்கோனாக இருந்த அவர் அமல உற்பவியின் போர்வீரர்கள் அமைப்பை (அமல உற்பவியின் போரணி!) ஸ்தாபித்தார்.
1918 ஏப்ரல் 28 அன்று அவர் குருப்பட்டம் பெற்றார். உரோமையிலுள்ள அர்ச். ஆந்திரேயா தெல் ஃப்ராத் தேவாலயத்தில் அவர் தமது முதல் திவ்விய பலிபூசையை நிறைவேற்றினார். 1919-ல் அவர் போலந்துக்குத் திரும்பி வந்தார். போலந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்தது. அவரோ தமக்காகவும், தமது ஞான சகோதரர்களுக்காகவும், மனுக்குலம் முழுவதற்காகவும் ஒரே ஒரு வகையான சுதந்திரத்தைத்தான் ஆசித்தார்: மரியாயின் பெரும் வீரராக இருக்கும் சுதந்திரம்!
அமல உற்பவ அன்னை நம்மில் வாழ்ந்து, நம்மிலும், நம் வழியாகவும் செயல்படும் படியாகவும், நம் இருதயத்தைக் கொண்டு அவர்கள் கடவுளை நேசிக்கும்படியாகவும், நித்தியத்திற்கும் அவர்களுக்கு நாம் முழுமையாக சொந்தமாயிருக்கும்படியாகவும், அவர்களை நெருங்கி வருவதும், அவர்களைப் போல் ஆவதும், அவர்க் நம் இருதயங்களின் மீதும், நம் சுயம் முழுவதன் மீதும் வெற்றி பெற அவர்களை அனுமதிப்பதும்; இதுவே நம் உத்தமமான குறிக்கோளாக இருக்கிறது.