குருத்துவ அபிஷேகம் பெறுதல்
சுவாமி மாக்ஸிமிலியன் 1918 ஏப்ரல் 28 அன்று வால்லேயிலுள்ள அர்ச். பிலவேந்திரர் கோவிலில் உரோமையின் முதன்மைக் கர்தினால் பெசில் பொம்ப்பலி என்பவரால் குருத்துவ அபிஷேகம் செய்விக்கப்பட்டார். தம் தாய்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் அவர் அந்த கணங்களைப் பின்வருமாறு நினைவுகூர்கிறார்: “பல்வேறு துறவற சபைகளைச் சேர்ந்த துறவிகளும், மேற்றிராசன குருநிலையினருமாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கே இருந்தோம். எங்கள் மத்தியில் ஒரு நீக்ரோ இனத்தவர் கூட இருந்தார். மற்றொரு நீக்ரோ கர்தினால்மாரிடையே இருந்தார். எல்லாத் தடைகளும் மறைந்து விட்டதைக் காண்பது எவ்வளவு அற்புதமானது் எல்லோரும் கத்தோலிக்க வேதத்தின் பந்தனத்தாலும், சேசு கிறீஸ்துநாதரில் சகோதர நேசத்தாலும் இணைக்கப்பட்டிருப்பதைக் காண்பது!”
அடுத்ததாக இந்த குருத்துவ அபிஷேகச் சடங்கு பற்றி அவர் விளக்குகிறார். அதைப் பற்றிய தம் சிந்தனைகளை இவ்வாறு எழுதுகிறார்: “நான் அமல உற்பவிக்கு எவ்வளவோ அதிக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்இ அவர்களுடைய மன்றாட்டினால் நான் பெற்றுக் கொண்ட ஒரு தேவ கொடையாகவே இதைப் பார்க்கிறேன். என் வாழ்வில் எத்தனை தடவைகள், குறிப்பாக முக்கியமான தருணங்களில், நான் அவர்களுடைய விசேஷ உதவியையும் பாதுகாவலையும் உணர்ந்திருக்கிறேன்! வரப்பிரசாதங்களை மனிதர்களின் மீது பொழிவதற்கு, கடவுளின் இரக்கத்தின் கரங்களில் கருவியாக இருக்கிற அமல உற்பவத்தின் வழியாக சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயத்திற்கு மகிமையுண்டாவதாக. நான் என் எதிர்காலத்தை முழுவதுமாக அமல உற்பவியிடம் ஒப்படைக்கிறேன்”.
தேவ தாயாருக்காக இழக்கப்பட்ட ஆன்மாக்களின் மீது வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய உதவியைப் பெறும் ஆசையோடு, ராட்டிஸ்போனுக்கு அமல உற்பவ மாதா காட்சி தந்த அதே பீடத்தின் மீது 1918 ஏப்ரல் 29 அன்றுஇ அவர் தமது முதல் திவ்விய பலிபூசையை நிறைவேற்றினார். மறுநாள் அர்ச். இராயப்பர் பேராலயத்தில் அவர் அர்ச். இராயப்பர், அர்ச். சின்னப்பரின் பூசையை நிறைவேற்றினார். அப்போஸ்தலர்களின் இளவரசருடைய பீடத்தில் ‘அப்போஸ்தலத்துவம் மற்றும் வேதசாட்சியம் ஆகியவற்றின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும்’ கருத்துக்காக பூசை நிறைவேற்றினார்.
சுவாமி மாக்ஸிமிலியன் தாம் பெற்றுக் கொண்ட குருத்துவ மகிமையைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருடைய ஆத்துமம் பக்தியார்வத்தால் நிறைந்திருந்தது. ‘சர்வேசுரனுக்குத் தகுதியுள்ள மகிமையை’ அவருக்கு அளிக்க முடியாத, “பரிதாபத்திற்குரிய, அழியக்கூடிய சிருஷ்டிகளாகிய நாம்” குறைந்த பட்சம் ‘கடவுளின் மகிமைக்காக நம்மால் முடிந்ததைச் செய்ய’ முயற்சி செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்தோ, தமது சக காலத்தவர்கள் கடவுளின் மகிமையைப் பெருகச் செய்வதில் எவ்வளவு குறைவான பக்திப் பற்றுதல் கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். ‘நம் காலங்களில் எல்லாவற்றிலும் பெரிய நோயாகிய அசட்டைத்தனம் எங்கும் நிறைந்திருக்கிறது’ என்று அவர் எழுதினார். இதை அவர் எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்றாலும், மற்றவர்களைப் போலத் தாமும் ஆகிவிடக் கூடும் என்ற அவருடைய பயத்தை அது நிறுத்தி விடவில்லை. ஆகவே, குருத்துவத்தின் அதிசயத்திற்குரிய வரப்பிரசாதத்திற்கும், மகிமைக்கும் தகுதியுள்ளவராகத் தாம் இருக்கச் செய்யும்படி அவர் இப்போது மன்றாடினார்.
1919 ஜுலை 22 அன்று சுவாமி மாக்ஸிமிலியன் வேதசாஸ்திரக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று, போலந்துக்குத் திரும்பி வர ஆயத்தங்களைத் தொடங்கினார். ஒரு செஞ்சிலுவை இரயிலில் ஐந்து நாள் பயணத்திற்குப் பிறகு, ஜுலை 28-29க்கு இடைப்பட்ட இரவில், அவர் தம் தாய்நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
க்ராக்கோவில் திருச்சபையின் வரலாற்றுப் பேராசியராக அவர் பணியாற்ற வேண்டும் என்று அவருடைய மேலதிகாரிகள் முடிவு செய்தனர்.
சுவாமி கோல்பே ஆர்வத்தோடு தமது பேராசிரியர் பணியைத் தொடங்கினார். அதே சமயத்தில் 1917-ல் தாம் ஸ்தாபித்த சபையைப் பற்றியும் அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்....
குருத்துவத்தின் தொடக்க ஆண்டுகள்
1920 பிப்ரவரியில் சுவாமி மாக்ஸிமிலியன் தமது தனி தியானப் பயிற்சிகளைச் செய்தார். இந்த தியானப் பயிற்சிகளின் விளைவாக மூன்று கொள்கைகள் அவருடைய மனதில் தோன்றி உறுதியடைந்தன. அவற்றை அந்நேரமுதல் கடைபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். தாம் தெரிந்து கொண்ட பாதையை மறந்து போகாதபடியும், அதிலிருந்து விலகிச் சென்று விடாதபடியும், அவர் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அவற்றை மீண்டும் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இவை அவருடைய புகழ்பெற்ற ரெகுலாமெந்த்தும் வீத்தே ஆக - அவருடைய வாழ்வின் ஒழுங்குகளாக - இருந்தன்
- ‘நான் ஓர் அர்ச்சியசிஷ்டவனாக வேண்டும், ஓர் அர்ச்சியசிஷ்டவர் எவ்வளவு சிறந்து விளங்க முடியுமோ, அவ்வளவு சிறந்த அர்ச்சியசிஷ்டவராக வேண்டும்.
- இரட்சணியத்தின் வழியாகவும், அமல உற்பவியின் வழியாகப் பெற்றுக்கொள்ளும் என்னுடையவும், மற்ற அனைவருடையவும் மிக உத்தமமான அர்ச்சிப்பின் வழியாகவும் கடவுளுடைய மிகப் பெரும் மகிமைக்காக உழைக்க வேண்டும்.
முழுமையாகவும், நிபந்தனையற்ற விதத்திலும், மட்டற்ற விதத்திலும், மாற்றப்பட முடியாத விதத்திலும் அமல உற்பவ அன்னைக்கு நீ சொந்தமாயிருக்கிறாய் என்பதை எப்போதும் நினைவு கூர்வாயாக. நீ யாராக இருந்தாலும், உன்னிடம் என்னென்ன இருந்தாலும், உன்னால் என்னென்ன செய்ய முடியுமென்றாலும், உன் எல்லாச் செயல்பாடுகளும் (சிந்தனைகள், வார்த்தைகள், செயல்கள்) ஆபாசங்களும் (மகிழ்ச்சியான, மகிழ்ச்சியற்ற அக்கறையற்ற சகல ஆசாபாசங்களும்) முழுவதுமாக அவர்களுக்கே சொந்தம்.
(நீ விரும்புவதை அல்ல), அமல உற்பவி எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அதையெல்லாம் செய்வார்களாக. அவ்வாறே அவர்களுடைய விருப்பங்களே உன் விருப்பங்களாகவும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் தன் விருப்பப்படி (உன்னிடம் எதையும்) மாற்றவும், சேர்க்கவும், அகற்றவும் செய்வார்களாக. (ஏனெனில் நீதியானதை அழித்து விட அவர்களால் ஒருபோதும் முடியாது). நீ அவர்களுடைய கரத்தில் ஒரு கருவியாக இருக்கிறாய். ஆகவே அவர்கள் விரும்புவதை மட்டும் செய். அவர்களுடைய கரங்களிலிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள். ஒரு குழந்தை தன் தாயிடம் ஓடுவது போல எல்லாக் காரியங்களிலும் அவர்களிடம் ஓடிச் செல். எல்லாவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து விடு.
அவர்களை மகிழ்விக்க முயற்சி செய், அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற கவனமாயிரு. உன்னையும், உன்னைச் சேர்ந்தவர்களையும் பராமரிக்கும் வேலையை அவர்களிடம் விட்டுவிடு. உனக்கு வரும் எல்லாவற்றையும், அவர்களிடமிருந்தே வருவதாகக் கருதி ஏற்றுக் கொள்.
அவர்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தின் கருவியாக இருக்கிறார்கள் என்பதால், உன் வேலையின் பலன், நீ அவர்களோடு எந்த அளவுக்கு ஒன்றித்திருக்கிறாய் என்பதைப் பொறுத்ததாக இருக்கிறது.
வாழ்வும் (அதன் ஒவ்வொரு கணமும்), சாவும் (எங்கே, எப்போது, எப்படி என்பதும்), என் நித்தியமும், ஓ அமல உற்பவ அன்னையே, எல்லாம் உங்களுடையது. அவற்றைப் பொறுத்த வரை உங்களுக்கு விருப்பமானது எதுவோ, அதையே செய்யுங்கள்.”
சுவாமி மாக்ஸிமிலியன் தம்மை வீரத்துவத்தின் மிக உயர்ந்த சிகரங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியதும், அவர் இனி ஒருபோதும் கைவிடாமல் இருக்கப் போவதுமான பாதையை ஏற்கனவே முழு அறிவோடும், உறுதியான மனதோடும் தேர்ந்தெடுத்து விட்டார் என்பதை நம்மால் காண முடிகிறது!
1920 கோடை காலத்தில் மீண்டும் அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். தன்னிடம (அதாவது மோட்சத்திற்கு) வரும்படி அமல உற்பவி தமக்குக் கட்டளையிடுவதற்காக சுவாமி மாக்ஸிமிலியன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் தம் வியாதிக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வதற்காக அவர் ஸாக்கோபேனுக்குச் செல்ல வேண்டும் என்று அவருடைய மேலாதிகாரிகள் தீர்மானித்தனர். 1920 ஆகஸ்ட் 10 அன்று அவர் அங்கு போய்ச் சேர்ந்து, அங்கிருந்த ஒரு சிறிய மருத்துவமனையின் பரிபாலனக் குருவாக ஆனார்.