2015 மார்ச் மடல்

அமலோற்பவ மாமரி ஸ்துதிக்கப்படுவார்களாக!

அன்புள்ள போர்வீரர்களே,

தவக்காலத்தின்போது, அர்ச். மாக்ஸிமிலியன் நமக்கு நினைவுபடுத்துவதாவது் “சேசுநாதர் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதன் அவசியத்தைத் தெள்ளத் தெளிவாக வலியுறுத்தினார். அமல உற்பவத் தாயாரும் தன்னுடைய விருப்பமாக ஒரு தவ முயற்சியை பெர்னதெத்தம்மாளுக்குச் சுட்டிக் காட்டினார்கள்.” “நாம் எப்படி தவம் செய்ய வேண்டும்?” இது அமல உற்பவத் திருநகரத்தின் ஸ்தாபகருடைய கேள்வியாகும். தங்கள் வாழ்வு முழுவதும் சிலுவைகளால் நிரவப்பட்டுள்ளது. ஆயினும் எல்லா நிகழ்வுகளிலும், உடல்நலமும் கடமைகளும் மிகக் கடுமையாகத் துன்புற நம்மை அனுமதிப்பதில்லை என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

இந்த மரியாயின் பக்தர், லூர்திலுள்ள அற்புதக் கெபிக்கு அடுத்து முழந்தாளிட்டிருந்த போது, “இந்தச் சிலுவைகளை ஏற்றுக் கொள்வதுதவத்தைப் பயிற்சி செய்வதற்கான ஒரு பெரும் வாய்ப்பு என்பதை அறிந்திருந்தார். இன்னும் மேலாக, கடமைகளையும், கடவுளின் சித்தத்தையும் (செயல்களிலும் வார்த்தைகளிலும்) ஒவ்வொரு கணமும் நிறைவேற்றுவதற்கு நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பல காரியங்களை நாம் பரித்தியாகம் செய்யச் செய்கிறது. இது பாவப் பரிகாரத்தின் மிக அபரிமிதமான ஆதாரமாகும்.” ஆயினும் நாம் சம்மனசுக்களல்ல, மனிதர்களே என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். “துன்புறவும், அவமானப்படுத்தப்படவும் நான் பயப்படுகிறேன். ஆயினும் ஜெத்சமெனித் தோட்டத்தில் இதையே அனுபவிக்க சேசுநாதர் விரும்பினார் என்பது எனக்கு ஆறுதல் தருவதையும் நான் காண்கிறேன். நமக்கு தேவைப்படும் மிகச் சரியான நேரத்தில் வரப்பிரசாதம் வருகிறது” என்று தாம் சொன்னபோது அவர் இதை எண்பித்தார்.

நம்முடைய மந்த நிலை, ஏன், வீழ்ச்சிகளைப் பற்றியும் கூட நாம் வருத்தத்திற்கு உள்ளாக மாக்ஸிமிலியன் நம்மை அனுமதிப்பதில்லை. “நாம் வேண்டுமென்று, மிக அடிக்கடி கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டிருந்தாலும் கூட, அதைரியப்படுதலின் பசாசால் நாம் ஏமாற்றப்படக் கூடாது. நீங்கள் குற்றமுள்ளவர்களாக உணர்ந்ததும், மாமரி என்ற ஒரு வார்த்தையோடு தயக்கமின்றி, உங்கள் பாவத்தைக் கொடுத்து விடுங்கள்” என்று அவர் நம்பிக்கையோடு நமக்குக் கற்பிக்கிறார். நாம் எழுவதற்காகத்தான் விழுகிறோம் என்பதையும், நம்முடைய ஒவ்வொரு வீழ்ச்சியும், உத்தமதனத்தின் ஏணியில் ஒரு மேல்நோக்கிய படி என்பதையும் அவர் அறிந்திருந்தார். “அமல உற்பவ மாமரி, சுயதன்மை, வீண் மகிமை ஆகியவற்றிலிருந்து நம்மைக் குணப்படுத்தவும், தாழ்ச்சியை நமக்குக் கற்பிக்கவும், கடவுளின் வரப்பிரசாதத்திற்கு அதிக அமைதலுள்ளவர்களாக நம்மை மாற்றவும், நாம் விழுவதை அனுமதிக்கிறார்கள். ஆனால் பசாசோ அவநம்பிக்கையையும், அதைரியத்தையும் நோக்கி நம்மைத் தள்ளுகிறான். நம் நிர்ப்பாக்கிய நிலை பற்றிய உண்மையை மட்டும் நாம் அறிந்திருப்போம் என்றால், நம் தவறுகளைக் கண்டு நாம் எந்த விதத்திலும் ஆச்சரியப்பட மாட்டோம். மாறாக, இன்னும் ஆழமாகவும், இன்னும் அடிக்கடியும் விழாதிருப்பது பற்றி நாம் அதிசயித்த, அதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். கடவுளிடமிருந்து வரப்பிரசாதமும், அமல உற்பவியிடமிருந்து அவர்களுடைய இரக்கமுள்ள கரமும் இல்லாவிடில், எல்லா வகையான பாவங்களின் ஆபத்திற்கும் நாம் உள்ளாகியிருப்போம்.”

நம் இராக்கினி பாவங்களிலிருந்தும், தீமையிலிருந்தும் நம் விடுதலையாக இருக்கிறார்கள் என்று மாக்ஸிமிலியன் அறிந்திருந்தார். கடவுளுடனான அவர்களுடைய தொடர்பின் இணக்க நிலை பற்றி அவர் மகிழ்ச்சியடைந்தார். அவரது கண்ணோட்டத்தில், குழப்பமுற்றிருக்கிற மனுக்குலத்திற்கு அவர்கள் மட்டுமே வழியாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர் தமது அமல உற்பவப் போர்வீரர்களிடம் ஒரு வேதபோதக மனநிலையை எதிர்பார்த்தார். அதாவது வீரத்தோடு நோய்களை, அல்லது கடினமான அனுபவங்களைத் தாங்கும் மனநிலை, அச்சுத்துறை அப்போஸ்தலத்துவம், மற்றும் ஒரு முழுநேர இல்லறத் துறவற, மற்றும் மடத்துத் துறவற வாழ்வு ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார்.

அமல உற்பவிக்காகவும், அவர்கள் வழியாக சேசுவின் ஆசீர்வதிக்கப்பட் திரு இருதயத்திற்காகவும் உலகத்தை வெற்றி கொள்வது என்று வரும்போது, சகலமும் அதனதன் அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த உலகத்தின் பெரும் குழப்ப நிலையில், நாம் சத்தியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அர்ச். மாக்ஸிமிலியன் அதைத்தான் செய்தார். அதனாலேயே அவர் ஆஸ்க்விட்ஸ் சித்திரவதைக் கூடத்திலும் கூட சுயாதீனமுள்ளவராகவே நிலைத்திருந்தார். அவர் தம்மை வாதித்தவர்களுக்காக ஜெபித்தார். தமது சக கைதிகளுக்கு இறுதி வரை பாவ மன்னிப்பளித்தார். சிலர் அவரை “வினோதமான மனிதர்” என்று நினைத்தார்கள். ஏனெனில் விசாரணை நேரங்களில் அவர் உடைந்து போகவில்லை. தமது வேதபோதகங்களில் கஷ்டங்களும், அதைரியப்படும் நிலையும் வந்தபோதும் அவற்றிலிருந்து அமல உற்பவத் தாயார் தன்னை வெளியே கொண்டு வருவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். “அவர்கள் எனக்குப் பலம் தருவார்கள்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். நாம் நம் சித்தத்தை மாமரியிடம் கையளிக்கும் போது அது அவர்களுடைய கரங்களில் ஒரு கருவியாக, நமது அர்ச்சியசிஷ்டவர் அடிக்கடி குறிப்பிட்டுப் பேசிய கருவியாக ஆகிறது. அவர்களால் வழிநடத்தப்பட அவர் தம்மை அனுமதித்தார். ஏனெனில் அவர்கள் மட்டுமே ஓர் இருதயத்தை, தன் திருக்குமாரனுக்கு அவர்கள் வழங்கிய அதே இருதயத்தை, உருவாக்க முடியும் என்று அவர் அறிந்திருந்தார்.

அர்ச். மாக்ஸிமிலியனின் வாழ்வு அவருடைய மரண வேளையில் மட்டுமின்றி, அவர் நோய் வாய்ப்பட்டிருந்தபோதும், அவருக்கு மிக நெருக்கமான உடன் ஊழியர்கள் அவரைக் கைவிட்ட போதும், தமது நண்பர்களால் அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட போதும், அல்லது அவர் இட்ட மிகப் பெரிய திட்டங்கள் நொறுங்கிப் போனபோதும் அவருடைய வாழ்வு வீரத்துவமுள்ளதாகத் தான் இருந்தது. தமது சபையின் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி அவர் தமக்கு மிகப் பிரியமான வேதபோதகக் களங்களை விட்டுச் செல்லவும் வேண்டியிருந்தது. இந்தக் கஷ்டமான தருணங்கள் ஒவ்வொன்றிலும், “அமல உற்பவ அன்னையே, நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்ற ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர் கேட்டார். அதன்பின், அந்த அன்னை தமக்காக ஆயத்தம் செய்த பாதையில் சுதந்திரமான இருதயத்தோடு அவர் நடந்து சென்றார். தமது சுதந்திரமான இருதயத்தையே தமது அமல உற்பவப் போர்வீரர்களுக்கு அவர் தந்தை வழிச் சொத்தாக விட்டுச் சென்றார். மேலும், தமது வாழ்வு முழுவதையும் கொண்டு, நேசிக்கிற ஓர் இருதயம் எப்போதும் சுதந்திரமுள்ளதாகவே இருக்கிறது என்று அவர் எண்பித்தார்.

அமலோற்பவத் தாயாரில் சக போர்வீரன்.


No photo  news003.jpg